குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

குடிநீர் வழங்காததை கண்டித்து திருவள்ளூரில் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2019-06-04 05:36 IST
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை காலனியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாகசாலை காலனியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் பழுது ஏற்பட்டு அதன்மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தண்ணீரை பயன்படுத்த முடியாமல் தினமும் அவதியுற்று வந்தனர். தற்போது அவர்கள் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பொன்னான்குளம் பகுதியில் இருந்து நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி பொதுமக்கள் ஊராட்சி செயலாளரிடம் பலமுறை எடுத்துக்கூறியும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பாகசாலை பகுதிக்கு மட்டும் குடிநீர் வினியோகம் செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு தங்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஒரு தலைபட்சமாக செயல்படும் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதே போல் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் பள்ளிப்பட்டு அடுத்த ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சிக்குட்பட்ட அமுதாரெட்டிக்கண்டிகையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள், நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு கையில் காலி குடங்களை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். அதை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்