கூடங்குளம் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

கூடங்குளம் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;

Update:2019-06-05 03:15 IST
கூடங்குளம்,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் தெலாசியஸ். இவருடைய மகள் லூர்டஸ் இனிகோ (வயது 26). இவர் மாலத்தீவு நாட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோடை விடுமுறையை முன்னிட்டு, தனது சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் லூர்டஸ் இனிகோ வருகிற 8-ந் தேதி மாலத்தீவு நாட்டுக்கு மீண்டும் பணிக்கு திரும்பி செல்ல திட்டமிட்டு இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் லூர்டஸ் இனிகோ தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைப் பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த லூர்டஸ் இனிகோவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அருகே ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்