கள்ளக்குறிச்சியில், முகிலன் மனைவி சென்ற கார் டயர் வெடித்தது - கணவரை பார்க்க உறவினர்களுடன் சென்றபோது விபத்து

கள்ளக்குறிச்சி அருகே கார் டயர் வெடித்த விபத்தில் முகிலன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.;

Update:2019-07-08 04:45 IST
கள்ளக்குறிச்சி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளரும், சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து அவரை உடனே கண்டுபிடித்து தருமாறு அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து முகிலனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பதி ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் முகிலன் சிக்கினார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் தமிழ்நாடு போலீசார் திருப்பதிக்கு விரைந்து சென்று, முகிலனை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கரூரில் இருந்த முகிலனின் மனைவி பூங்கொடி தனது உறவினர்களுடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை கண்ணன் என்பவர் ஓட்டினார். அந்த கார், நேற்று காலை 10 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது காரின் முன்பக்க வலதுபுற டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டி ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த முகிலனின் மனைவி பூங்கொடி, உறவினர்கள் கனி ஓவியம், ராஜேஷ், விஸ்வநாதன் மற்றும் டிரைவர் கண்ணன் ஆகியோர் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தொடர்ந்து வாடகை காரை வரவழைத்து அதில் ஏறி அவர்கள் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்