அயோத்தியாப்பட்டணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல்

சேலம் அருகே அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் சிக்கியது.

Update: 2019-07-17 23:30 GMT

அயோத்தியாப்பட்டணம், 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் சார்பதிவாளர் அலுவலகம் ரெயில்வே கேட் அருகே இயங்கி வருகிறது. இங்கு சார்பதிவாளராக தனசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு சந்திரமவுலி தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு சார்பதிவாளர் தனசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் சில பத்திர எழுத்தர்களும் இருந்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை பூட்டிவிட்டு அங்கிருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அலுவலக ஆவணங்களையும் பார்வையிட்டு அது குறித்தும் பணியாளர்களிடம் விசாரித்தனர்.

பின்னர் அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த கணக்கில் வராத ரூ.92 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 4.30 மணி வரை நீடித்தது.

விடிய, விடிய நடந்த இந்த திடீர் சோதனையின் போது கணக்கில் வராத ரூ.92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 10½ மணி நேரம் நடைபெற்ற இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்