வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நிலஅளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைப்பு; 4 விவசாயிகள் மீது வழக்கு

வெள்ளகோவில் அருகே உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீடு செய்ய வந்த என்ஜினீயரின் வேன் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக 4 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-07-19 23:30 GMT

வெள்ளகோவில்,

வெள்ளகோவில், காங்கேயம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க நில அளவீடுகள் செய்தல், கோபுரம் அமைக்கும் பணிகள் ஆங்காங்கே போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளகோவில் அருகே உள்ள குள்ளசெல்லிபாளையத்தில் உள்ள ஒரு விவசாயி தோட்டத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக நில அளவீடு செய்ய என்ஜினீயர் செண்பகம்பிள்ளை(வயது 55) தலைமையில் 4 பேர் வேனில் சென்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் அனுமதி இல்லாமல் எங்கள் நிலத்திற்குள் வரக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அங்கு நின்றிருந்த விவசாயிகள் சிலர் அதிகாரிகள் வந்த வேனின் முன்பக்க கண்ணாடியை கற்களால் உடைத்தனர். இதையடுத்து அங்கு நில அளவீடு செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து செண்பகம்பிள்ளை வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் விவசாயிகளான சுப்பிரமணியகவுண்டன் வலசுவை சேர்ந்த வெங்கடாச்சலம், புதுப்பையை சேர்ந்த செந்தில்குமார், கரட்டுப்பாளையத்தை சேர்ந்த திருமலைசாமி, தர்மலிங்கம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்