விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான வழக்கு: தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை

விபத்தில் மாணவர்கள் உள்பட 8 பேர் பலியான வழக்கில் தனியார் பஸ் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Update: 2019-07-24 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், மேல குளவாய்ப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 39). பால் வியாபாரம் செய்து வரும் இவர், தனது சரக்கு வேன் மூலம் புதுக்கோட்டைக்கு வந்து பால் விற்பனை செய்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 19.6.2013-ம் ஆண்டு ஆறுமுகம் புதுக்கோட்டைக்கு வந்து பால் விற்பனை செய்துவிட்டு மீண்டும் தனது சரக்கு வேனில் மேல குளவாய்ப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். விஜயரகுநாதபுரம் அருகே சென்ற போது அங்கே பஸ்சுக்காக காத்திருந்த பள்ளி மாணவர்களுக்கு ‘லிப்ட்‘ கொடுத்து அழைத்து சென்றுள்ளார். வாண்டாக்கோட்டை பாலம் அருகே வந்தபோது எதிரே அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மீது மோதியதில் 7 மாணவர்கள் மற்றும் வேன் டிரைவர் ஆறுமுகம் ஆகியோர் பலியாகினர். காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

2 ஆண்டு சிறை

இந்த சம்பவம் குறித்து வல்லத்திரக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிமளம் ஓனாங்குடியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் பாலசந்திரனை கைது செய்து புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று நீதிபதி அறிவு தீர்ப்பு வழங்கினார். அதில், விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் பாலசந்திரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். 

மேலும் செய்திகள்