ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலக்கரி பெட்டியில் 2-வது நாளாகவும் புகை வந்ததால் பரபரப்பு

ஈரோடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலக்கரி பெட்டியில் 2-வது நாளாகவும் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-28 22:45 GMT
ஈரோடு,

கேரள மாநிலம் வாழையாறு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக 45 பெட்டிகளில் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது. ஒவ்வொரு பெட்டியிலும் 225 டன் நிலக்கரி ஏற்றப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சிக்னல் கிடைக்காமல் கடந்த 4 நாட்களாக ஈரோடு ரெயில்வே பணிமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில், நிலக்கரியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயிலில், ஒரு பெட்டியில் மட்டும் அதிக அழுத்தம் காரணமாக திடீரென கரும்புகை வந்தது. இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் இதுபற்றி உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அதன் பின்னர் புகை வந்த நிலக்கரி பெட்டி மட்டும் தனியாக கழற்றி விடப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு புகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் புகை வந்த அதே நிலக்கரி பெட்டியில் இருந்து நேற்று 2-வது நாளாக கரும்புகை வந்தது.

அதைத்தொடர்ந்து இதுபற்றி ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அதிகாரி மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலக்கரியில் மீண்டும் தண்ணீரை பீய்ச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தால் நேற்றும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்