ஓடும் ரெயிலில் வழிப்பறி செய்தவர்களை பிடிக்க முயன்ற வாலிபர் சாவு - கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
ஓடும் ரெயிலில் வழிப்பறி செய்தவர்களை பிடிக்க முயன்ற வாலிபர் இறந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை திண்டுக்கல் ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.;
திண்டுக்கல்,
மதுரை மாவட்டம் புதூர் அருகே உள்ள பரசுராம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. அவருடைய மகன் பாலாஜி (வயது 27). கடந்த 31-ந்தேதி நள்ளிரவில் இவர், தனது தாய் மற்றும் உறவினர்களுடன் மதுரையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயிலில் ஏறினார். அந்த ரெயில் திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு வந்தது.
பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்ட போது, பாலாஜியின் உறவினர் பெண் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பியோடினார். இதைப்பார்த்த பாலாஜி அவரை பிடிக்க முயன்றார். அப்போது ஓடும் ரெயிலில் இருந்து அந்த நபர் குதித்து தப்பிச்சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த பாலாஜியும் ரெயிலில் இருந்து குதித்தார். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திண்டுக்கல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று, கொடைரோடு ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 6 பேரை மதுரை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து திண்டுக்கல் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவர், ரெயிலில் அடிபட்டு வாலிபர் இறக்க காரணமானவர் என்பதை தெரிந்துகொண்ட திண்டுக்கல் போலீசார் 6 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டம் புதூரை சேர்ந்த ஹரிகரன் (21), கலில்ரகுமான் (19), மாரி (19), விக்னேஷ் (19), சேதுபதி (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு வரும் ரெயில்களில் பயணம் செய்பவர்களிடம் வழிப்பறி செய்து வந்ததும் தெரியவந்தது.
அதன்படி கடந்த 31-ந்தேதி பாலாஜி பயணம் செய்த ரெயில் பெட்டியில் தான் இவர்கள் 6 பேரும் வந்துள்ளனர். பாலாஜியின் உறவினர் பெண்ணிடம் இருந்து ஹரிகரன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றதும், மற்ற 5 பேரும் அம்பாத்துரை ரெயில் நிலையத்தில் பயணிகள் போல் இறங்கி தப்பிச்சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும் 17 வயது சிறுவனை தவிர மற்ற 5 பேர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்ததும், செலவுக்காக கொடைரோடு ரெயில் நிலையத்தில் வழிப்பறி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.