ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை

ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-07 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு காரைவாய்க்கால் மொய்தீன்வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58). இவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையம் அருகில் புத்தகக்கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி கலாவதி. இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கலாவதியின் தந்தை ராஜமாணிக்கமும், தாய் சித்தம்மாளும் முருகேசன் வீட்டில் வசித்து வருகிறார்கள். வீட்டின் தரைதளத்திலும், முதல் தளத்திலும் முருகேசனின் குடும்பத்தினர் வசிக்கின்றனர். 2–வது மாடியை வாடகைக்கு விட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிஅளவில் முருகேசன், கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் முருகேசன், கலாவதி, முருகேசனின் மைத்துனர் சிவக்குமார் ஆகியோர் முதல் தளத்தில் உள்ள வீட்டில் தூங்க சென்று விட்டனர். தரைதளத்தில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் ராஜமாணிக்கம், சித்தம்மாள் ஆகியோர் தூங்கினார்கள்.

நேற்று அதிகாலை 5 மணிஅளவில் கலாவதி நடைபயிற்சி செல்வதற்காக முதல் மாடியில் இருந்து எழுந்து கீழே வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஒருவேளை தாய் சித்தம்மாள் எழுந்து இருப்பாரோ என்று சந்தேகப்பட்ட அவர் வீட்டுக்குள் சென்றார். ஆனால் மின்விளக்குகள் எதுவும் போடப்படாமல் இருட்டாக இருந்தது.

எனவே படுக்கை அறையில் சென்று பார்த்தபோது அவருடைய தந்தையும், தாயும் தூங்கிக்கொண்டு இருந்தனர். பின்னர் மற்றொரு படுக்கை அறையில் சென்று பார்த்த கலாவதி அதிர்ச்சி அடைந்தார். அங்குள்ள பீரோவின் கதவு திறக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தது. உடனடியாக அவர் முருகேசனை எழுப்பி தகவலை தெரிவித்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கிய நேரத்தில் மர்மநபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்து உள்ளனர். பின்னர் ஜன்னலை திறந்து அதன் வழியாக ஒரு குச்சியை உள்ளேவிட்டு, சுவரின் ஆணியில் தொங்கவிடப்பட்டு இருந்த சாவியை லாவகமாக எடுத்து உள்ளனர். அந்த சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்ற மர்மநபர்கள் படுக்கை அறைக்கு சென்றுள்ளனர். அங்கு பீரோவுக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து 22 பவுன் நகையையும், ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டின் உள்ளே சுவரில் தொங்க விடப்பட்டு இருந்த சாவியை லாவகமாக எடுத்து கொள்ளையடிக்கப்பட்டதால், கொள்ளையன் முருகேசனின் வீட்டுக்கு ஏற்கனவே சென்று நோட்டமிட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே முருகேசனுக்கு தெரிந்த நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா?, மர்மநபர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களா? என்றும் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்