சிவகங்கையில் ரெயிலில் சங்குகள் கடத்த முயன்ற 2 பேர் சிக்கினர்

சிவகங்கை ரெயில் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு போலீசார் நடத்திய சோதனையின்போது ரெயிலில் தடை செய்யபட்ட சங்குகளை கடத்த முயன்ற 2 பேர் சிக்கினர்.

Update: 2019-08-13 23:00 GMT
சிவகங்கை,

நாளை (வியாழக்கிழமை) சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோகித்நாதன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் கோவில் உள்பட அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதவிர ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளிள் உடைமைகளை தீவிரமாக சோதனை நடத்திய பின்னரே ரெயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.

இந்தநிலையில் சிவகங்கை ரெயில் நிலையத்தில் மாவட்ட வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு கருவி ஆகியவற்றுடன் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ராமேசுவரத்தில் இருந்து திருச்சி செல்லும் பாசஞ்சர் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் இருந்து வந்த பயணிகளின் கைப்பை உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரெயிலில் இருந்து இறங்கிய 2 பயணிகள் கொண்டு வந்த சாக்கு மூடைகளை இறக்கி சோதனை செய்தபோது, அதில் அரியவகை முள் சங்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவற்றை விற்க தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே அதனை ரெயிலில் கடத்திய 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பிடிபட்டவர்கள் பாம்பனை சேர்ந்த கர்ணன், பரமக்குடியை சேர்ந்த சிவா என்பதும், அவர்கள் இந்த சங்குகளை விற்பனை செய்வதற்காக சாக்கு மூடைகளில் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த சங்குகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 2 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்