அம்பத்தூரில் ஆட்டோவில் வந்த போலீஸ்காரரை தாக்கி நகை, பணம் பறிப்பு

அம்பத்தூரில், ஆட்டோவில் வந்த போலீஸ்காரரை தாக்கி நகை, பணம் பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2019-09-03 03:15 IST
பூந்தமல்லி,

ஆந்திர மாநிலம் நெல்லூர், உதயகிரியை சேர்ந்தவர் ஜேம்ஸ்(வயது 55). அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் புதுச்சேரியில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு நெல்லூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.

பின்னர் அங்கிருந்து மாதவரம் பஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் சென்றார். அந்த ஆட்டோவில் மேலும் ஒருவர் உடன் வந்தார். அம்பத்தூர் கள்ளிக்குப்பம், ஞானமூர்த்தி நகர் அருகே ஆட்டோ சென்று கொண்டிருந்தது.

அப்போது ஆட்டோவில் உடன் அமர்ந்துஇருந்த நபர் திடீரென போலீஸ் ஏட்டு ஜேம்சை தாக்கி, அவரிடமிருந்த 4 பவுன் நகை, செல்போன் மற்றும் ரூ.1000 பறித்துவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்று விட்டார்.

இது குறித்து ஜேம்ஸ் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவில் தப்பிய மர்மநபரை தேடிவருகின்றனர்.

மர்மநபர் போலீஸ்காரரை தாக்கியபோது, ஆட்டோ டிரைவர் எதுவும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து உள்ளார். இதனால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்