வெள்ளம் வடிந்ததை தொடர்ந்து மின்சார ரெயில் போக்குவரத்து சீரானது

தண்டவாளங்களை சூழ்ந்து இருந்த வெள்ளம் வடிந்ததைத்தொடர்ந்து முடங்கியிருந்த மின்சார ரெயில் போக்குவரத்து நேற்று சீரானது.;

Update:2019-09-06 04:45 IST
மும்பை, 

மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றுமுன்தினம் வெளுத்து வாங்கிய பேய் மழை நகரையே புரட்டி போட்டது. நகரத்தின் தாழ்வான அனைத்து பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன.

நகரின் போக்குவரத்து உயிர் நாடியான புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமலும், வீடு திரும்ப முடியாமலும் ரெயில் நிலையங்களில் பரிதவித்தனர். இரவு நேரத்தில் பயணிகளை தங்க வைப்பதற்காக மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழையின் தீவிரம் குறைந்தது. சாலை மற்றும் தண்டவாளங்களில் தேங்கியிருந்த வெள்ளம் படிப்படியாக வடிந்தது. இதையடுத்து மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் முடங்கி இருந்த மின்சார ரெயில் சேவை நேற்று சீரானது. இதனால் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கின. அதே நேரத்தில் பல நீண்ட தூர ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்