மாவட்ட செய்திகள்
6 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி,

புதுச்சேரியில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கஞ்சா விற்பனையை ஒழிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் (பொறுப்பு) உத்தரவின் பேரில் கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன் மேற்பார்வையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுவை பெரியார் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா பொட்டலங்களுடன் 3 பேரை கையும் களவுமாக பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கேசவன் (வயது23), ருத்ரேஷ் (21) மற்றும் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்த சேகர் (66) என்பது தெரியவந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் அளித்த தகவலின்பேரில் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த அரக்கோணத்தை சேர்ந்த பாலாஜி (46) என்பவரையும் கைது செய்தனர். அவரிடமிருந்து 4½ கிலோ கஞ்சாவையும், 2 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.2¼ லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சந்தோஷ், ஏட்டுகள் ஜெயபிரகாஷ், ஆனந்த், முரளி, கிருஷ்ணமூர்த்தி, மற்றும் போலீஸ்காரர்களை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷா யாதவ் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்