தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தமிழக கல்வெட்டு படிமங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று மத்திய தொல்லியல் துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

Update: 2019-09-25 23:45 GMT
மதுரை,

மதுரையைச் சேர்ந்த மணிமாறன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கர்நாடக மாநிலம் மைசூருவில் கல்வெட்டு துறை செயல்படுகிறது. இந்த துறை மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தென் இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களான பனை ஓலை, செப்பேடுகள் போன்றவை படிமம் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவை தமிழர்களின் அரசியல், சமுதாய வரலாற்றை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தும் ஆதாரமாக உள்ளன.

சமீபத்தில் மைசூருவில் உள்ள கல்வெட்டுத்துறை அலுவலகத்தை மற்றொரு இடத்திற்கு மாற்றியபோது, தமிழ் கலவெட்டு படிமங்கள் பெரும்பாலானவை சேதமடைந்தன. அவற்றை புத்தக வடிவிற்கு மாற்றி, டிஜிட்டல் மயமாக்கி பாதுகாத்து இருக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டனர். இதனால் தமிழர்களின் வரலாறு, எதிர்கால தலைமுறையினருக்கு தெரியாமல் அழிந்து விடும். எனவே தமிழக வரலாற்றை பாதுகாக்கும் வகையில் மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு படிமங்களை தமிழக தொல்லியல் துறை வசம் ஒப்படைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக கல்வெட்டுகளில் இருந்து எடுக்கப்பட்ட படிமங்களை பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் இந்த வழக்கு குறித்து மத்திய தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதி ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்