உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சம் வெள்ளி கொலுசுகள், மெட்டிகள் பறிமுதல்

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான கொலுசுகள், மெட்டிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-10-12 22:00 GMT
வானூர், 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்களை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிகாரி சுப்புராஜ் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலையில் கிளியனூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அந்த காரில் பெண்கள் காலில் அணியும் 332 வெள்ளி மெட்டிகள், மற்றும் சிறிய அளவிலான வெள்ளி கொலுசுகள் 14, பெரிய அளவிலான கொலுசுகள் 24 இருந்தன. இது தொடர்பாக காரில் வந்தவர்களிடம் பறக்கும்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், திண்டிவனத்தை சேர்ந்த ராகுல்(வயது38), கார் டிரைவர் லட்சுமிபதி(24) என்பதும் உரிய ஆவணங்கள் இன்றி அந்த வெள்ளி பொருட்களை எடுத்துச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து கொலுசுகள், மெட்டிகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்து, வானூர் தாசில்தார் தங்கமணியிடம் ஒப்படைத்தனர். அவர் அந்த பொருட்களை கருவூலத்தில் ஒப்படைத்தார். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி கொலுசு, மெட்டிகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்