புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து மன்னார்குடியில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து மன்னார்குடியில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-10-15 23:15 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காளஞ்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆசைத்தம்பி(வயது 40). இவர், தற்போது மன்னார்குடியில் வசித்து வருகிறார். மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை மெயின்ரோட்டில் பழைய கார் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.

மேலும் இவர், காளஞ்சிமேடு பகுதியில் தன்னிடம் வேலை பார்க்கும் ஸ்ரீதர் என்பவர் பெயரில் டாஸ்மாக் பார் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிகிறது.

அதிரடி சோதனை

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி நெடுவாக்கோட்டையில் உள்ள கார் விற்பனை செய்யும் இடத்திற்கு கொண்டு வந்து அந்த மதுபாட்டில்களில் தமிழ்நாடு மதுபானம் என்ற பெயரில் லேபிள் ஒட்டி விற்பனை செய்து வருவதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி மத்திய புலனாய்வு பிரிவு மதுவிலக்கு போலீசார்் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

4 பேர் கைது-ரூ.15 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

அப்போது அங்கு புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை தமிழக மது பாட்டில்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த ஆசைத்தம்பி மற்றும் நாகை மாவட்டம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர்(23), திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த ராம்குமார்(24), அதே பகுதியை சேர்ந்த விஜய்(22) ஆகியோரை கைது செய்தனர்.

அங்கு பதுக்கி வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 328 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் மினி வேன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்