புதுமாப்பிள்ளை கொலையில் 5 வாலிபர்கள் கைது - போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

புதுமாப்பிள்ளை கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களது நண்பர்களை கொலை செய்ய திட்டமிட்டதால் தீர்த்து கட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

Update: 2019-10-17 22:30 GMT
மூலக்குளம், 

புதுச்சேரி குயவர்பாளையம் கருணாகரபிள்ளை வீதியை சேர்ந்தவர் ஆனந்தபாலாஜி(வயது27). எலக்ட்ரீசியன். பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவரது மனைவி ராஜி. இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகரில் உள்ள ஒரு டீக்கடைக்கு 5 பேருடன் சென்றுள்ளார்.

அப்போது அங்கு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஆனந்த பாலாஜியை கத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆனந்த பாலாஜியை வெட்டி கொலை செய்தது குயவர்பாளையத்தை சேர்ந்த விக்கி(வயது 24), சிவசங்கரன்(27), விக்னேஸ்வரன்(25), மதன்(24), ஸ்டீபன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் குயவர்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்கள் 5 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம், விக்கி அளித்த வாக்குமூலம் வருமாறு:-

ஆனந்தபாலாஜி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். அவரிடம் ரெட்டியார்பாளையம் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த அருள் (35), குயவர்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன்(32), திலாஸ்பேட்டையை சேர்ந்த கிஷோர்(24) ஆகிய 3 பேரும் வட்டி பணம் வசூல் செய்யும் வேலை செய்து வந்தனர். அவர்கள் 3 பேருக்கும் தினந்தோறும் மதுகுடிக்க ஆனந்தபாலாஜி பணம் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் மாலை அவர்கள் 3 பேரும் ஆனந்த பாலாஜியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அப்போது அவர் திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு பாரில் சென்று மது குடியுங்கள். நான் வந்து பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் அங்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 3 பேரும் நேராக ஆனந்த பாலாஜியின் வீட்டிற்கு சென்று அவரை தாக்கியுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆனந்தபாலாஜி என்னை அணுகி அவர்கள் 3 பேரையும் கொலை செய்ய வேண்டும் என்று கூறினார். அப்போது நான் அவரிடம், அவர்கள் 3 பேரும் எனது நண்பர்கள். அவர்களை நான் கொலை செய்ய முடியாது என்று கூறினேன். அதற்கு அவர் என்னிடம், நீ கொலை செய்யாவிட்டால் பரவாயில்லை நான் வேறு ஆட்களை வைத்து கொலை செய்வேன் என்று சவால் விட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனே நான் எனது நண்பர்களுடன் சேர்ந்து ஆனந்த பாலாஜியை கொலை செய்ய திட்ட மிட்டேன். எனவே அவரை விவேகானந்தா நகரில் உள்ள ஒரு டீக்கடைக்கு வரவழைத்தேன். அவரும் அங்கு வந்தார். நான் எனது நண்பர்களுடன் அங்கு வந்தேன். அங்கு நாங்கள் டீ குடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது அவரிடம் அருள் உள்பட 3 பேரையும் கொலை செய்யும் நோக்கத்தை கைவிட வேண்டும் என்று கூறினோம். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்தோம். போலீசார் எங்களை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்