பெங்களூருவில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து மதுரைக்கு மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை நாமக்கல்லில் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

Update: 2019-11-02 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நல்லிபாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சேலத்தில் இருந்து வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது மினிலாரியில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் மினிலாரியை பறிமுதல் செய்து நல்லிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மூட்டைகளை சரிபார்த்தபோது 100 மூட்டைகளில் சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

டிரைவர்கள் கைது

இது தொடர்பாக லாரி டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில், லாரியை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஒலக்கூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 27) என்பதும், மாற்று டிரைவர் அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (30) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி ஓமலூர் அருகே உள்ள வெடிகவுண்டனூரை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி முனியம்மாளுக்கு சொந்தமானது என்பதும், பெங்களூருவில் இருந்து மதுரைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டதும் தெரியவந்தது.

தொடர்ந்து இது தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மினிலாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வருவது தெரியாமல் இருக்க, மேல் பகுதியில் தக்காளி கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்