பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்களின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இன்றும், நாளையும் அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-11-07 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்களின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரை கொண்டு மாணவர்களுக்கான பேனா, பென்சில் செய்து உபயோகித்தல், கரும்பு சக்கை, மக்காச்சோள கழிவுகளில் இருந்து மக்கும் தேநீர் குவளைகள், உணவு உண்ணும் தட்டுகள் செய்தல், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சேப்டி நாப்கின், பருத்தி நூலால் செய்யப்பட்ட பைகள், தேங்காய் மட்டை, கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படும் சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து அதில் மக்களுக்கு பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும் கண்காட்சியில் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாட்டு, நடனம், பேச்சு, கவிதை போன்ற கண்கவரும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியில் பாரம்பரிய உணவுகள் விற்பனையும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வும் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தின் நலன் கருதியும் மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்