மாவட்ட செய்திகள்
ரூ.40 லட்சம் புகையிலைப்பொருட்கள் பறிமுதல்: வட மாநில அண்ணன்-தம்பி கைது

வீரகனூர் அருகே ரூ.40 லட்சம் மதிப்பிலான புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தலைவாசல்,

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே ராயர்பாளையம் குமரன்மலை அடிவாரத்தில் விவசாயி குமாரசாமிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர் அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஆவார். இவரின் தோட்டத்து வீட்டை வாடகைக்கு எடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக வீரகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம் ஆண்டவர் மற்றும் போலீசார் அந்த தோட்டத்து வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீரென சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு மினிலாரியில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் லோடு இறக்கப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். உடனே அந்த மினிலாரியுடன் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அப்போது அங்கிருந்த புகையிலைப்பொருள் விற்பனை கும்பல் தப்பி ஓடியது. இதில் இருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர்.

வடமாநில அண்ணன்-தம்பி கைது

பிடிபட்ட இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜோம்தாம் ராம்(வயது 34), அவருடைய தம்பி அஜா ராம்(32) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

இதில் கைதான அண்ணன்-தம்பி இருவரும் ஆத்தூர் விநாயகபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதும், அதே நேரத்தில், அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. பிரமுகருக்கு வலைவீச்சு

அதே நேரத்தில் இந்த புகையிலைப்பொருள் கடத்தல் கும்பலில் தப்பிஓடியவர்களில் ஒருவரான மினிலாரி டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அசோகாராம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் லாரி உரிமையாளரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே புகையிலைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு வீடு வாடகைக்கு கொடுத்த அ.தி.மு.க. பிரமுகர் குமாரசாமியும்(73) தலைமறைவாகி விட்டார்.

இந்த வழக்கில் தலைமறைவானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்