மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு 3 பேர் கைது

தாராபுரத்தில் அரசு பஸ் கல்வீசி தாக்கப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாராபுரம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர்ஆதிதிராவிடர் காலனியில் சம்பவத்தன்று அதிகாலை 3.30 மணிக்கு 3 வீடுகள் இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். குடியிருப்புகளுக்கு அருகே இருந்த 15 அடி உயர தடுப்பு சுவர், மழையின் காரணமாக இடிந்து வீடுகளின் மேல் விழுந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாகவும், தடுப்பு சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் என்பவரை கைது செய்ய வேண்டும் என்று கோரி, இறந்தவர்களின் உறவினர்களும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டம் கைவிடப்படவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் கலந்து கொண்டதால், போலீசார் அவரையும் கைது செய்திருந்தனர்.

பஸ் மீது கல்வீச்சு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சியின் நிர்வாகி பாலசுப்பிரமணியன் நகரை சேர்ந்த ஒண்டிவீரன் (வயது 50), சூரியநல்லூரைச் சேர்ந்த வடிவேல் (36) அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (21) ஆகியோர், புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனர்.

இந்த தாக்குதலில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடிகள் உடைந்ததோடு. பஸ்சில் பயணம் செய்த வள்ளுவர் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (20) மற்றும் தளவாய்பட்டிணத்தைச் சேர்ந்த ஹரி (21) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக காயம் அடைந்தவர்களுக்கு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்