இலங்கையில் இருந்து ராமநாதபுரத்திற்கு, தங்க கட்டிகளை கடத்தி நகைகளாக மாற்றிய கும்பல் சிக்கியது; 185 பவுன்-ரூ.10 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதி வழியாக இலங்கையில் இருந்து தங்க கட்டிகளை கடத்தி வந்து அதனை நகைகளாக மாற்றிய கும்பல் சிக்கியது. இவர்களிடம் இருந்து 185 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-12-15 22:00 GMT
ராமநாதபுரம்,

கடந்த 7-ந் தேதி மணோலி தீவு பகுதியில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பயங்கர ஆயுதம் என குறிப்பிடப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் அடங்கிய மர்ம பெட்டி ஒன்று கிடைத்தது. இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தீவு வழியாக இலங்கைக்கு 70 கிலோ கஞ்சா கடத்தி செல்லப்பட்டதும், அதற்கு கைமாறாக அங்கிருந்து 3 பண்டல்களில் தங்க கட்டிகள் வழங்கப்பட்டு படகோட்டி புலிப்படை என்பவர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கட்டிகள் ஒரு வல்லத்திற்கு மாற்றப்பட்டு சீனியப்பாதர்கா பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கடத்தல் பேர்வழிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் படகோட்டி புலிப்படை மூலம் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் கியாஸ் என்பவருக்கும், இலங்கை கொழும்புவில் உள்ள அவரின் தம்பிக்கும் இடையே அடிக்கடி கடத்தல் பரிமாற்றம் நடைபெற்று வந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில் தனிப்படை போலீசார் சுந்தரமுடையான் அருகே பூவன்குடியிருப்பு பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வேனை மடக்கி சோதனை நடத்தியபோது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் வேனில் சோதனையிட்டபோது அதில் 53 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் இருந்தது. வேனில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது பெருங்குளத்தை சேர்ந்த ரஞ்சித்(வயது 26), விஜய்(29), ராமேசுவரம் புதுரோடு காளிராஜ்(51) என்பதும், இவர்கள் இலங்கையில் இருந்து புலிப்படை மூலம் கடத்திவரப்பட்ட தங்க கட்டிகளை நகைகளாக மற்றும் பணமாக மாற்றி வீட்டில் வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜேசுதாஸ், செந்தில்குமார், திவாகர், குகனேஸ்வரன், முருகநாதன் ஆகியோர் ரஞ்சித் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 132 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்து 500 ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

கஞ்சா, போதை பொருட்களை கடத்தி சென்று அதற்கு பதிலாக தங்கத்தினை வாங்கி வந்து பங்கு பிரித்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கடத்தலில் சென்னை தொழிலதிபர் கியாஸ், விடுதி உரிமையாளர் பாபு, பிரவீன், படகோட்டி புலிப்படை, மாசி மகேந்திரன், உதயபிரகாஷ் என்ற கோபி, விஜய், ரஞ்சித், காளிராஜ் உள்ளிட்டோர் ஈடுபட்டு கடல்வழியாக கடத்தலை நடத்தி வந்துள்ளனர். பிடிபட்டுள்ள 3 பேரை தவிர மற்றவர்கள் குறித்த முழுவிவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசார் கைப்பற்றிய ரூ.10 லட்சத்து 9 ஆயிரத்து 500 மற்றும் 185 பவுன் நகை ஆகியவை குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் நகைகளை அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை முடிவு செய்யப்பட்டது. ஆனால், தங்க கட்டிகளாக இருந்தால் மட்டுமே தாங்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நகைகளாக இருப்பதால் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் சுங்கத்துறையினர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கடல்பகுதியில் அமைந்துள்ள தீவுகளை மையமாக வைத்து கடத்தல் நடத்தப்பட்டு அதன்மூலம் கொண்டுவரப்பட்ட தங்க கட்டிகள் நகைகளாக மாற்றப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்