திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண் குத்திக்கொலை ஜோதிடர் கைது

திருச்செங்கோடு அருகே திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-14 23:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிவலசு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, ஜோதிடர். இவருடைய மகள் வெள்ளையம்மாள் (வயது 21). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது. 6 மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வெள்ளையம்மாள் கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டி அன்னை செட்டியார் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்து (25), ஜோதிடர். இவர் தொழில் சம்பந்தமாக கந்தசாமி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது முத்துவிற்கு வெள்ளையம்மாளுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

உல்லாசம்

திருமண ஆசை வார்த்தை கூறி வெள்ளையம்மாளுடன் முத்து அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அந்த சமயங்களில் முத்து, வெள்ளையம்மாளிடம் தான் பண பிரச்சினையால் சிரமப்படுவதால், நீ பணம் கொடுத்து எனக்கு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார். வெள்ளையம்மாளும் வருங்கால கணவர் தான் கேட்கிறார் என நினைத்து, தன்னிடம் இருந்த நகையை அடமானம் வைத்தும், கூலிவேலைக்கு சென்றதன் மூலம் கிடைத்த பணத்தையும் முத்துவிடம் கொடுத்துள்ளார்.

மேலும் அவர் பல்வேறு இடங்களில் கடன் வாங்கி முத்துவுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துவிடம் வெள்ளையம்மாள் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக கூறப் படுகிறது.

குத்திக்கொலை

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ளையம்மாள் தான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி முத்துவிடம் கேட்டு தகராறு செய்தார். இல்லையென்றால் இதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்துவிடுவேன் எனக் கூறி வெள்ளையம்மாள் அவரை மிரட்டியுள்ளார். இதனால் அவர் மீது முத்துவிற்கு ஆத்திரம் ஏற்பட்டதால் கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 11-ந் தேதி முத்து தன் திட்டத்தை அரங்கேற்ற, வெள்ளையம்மாளை போனில் தொடர்பு கொண்டு நாம் திருச்சி அருகே உள்ள துடையூருக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினார்.

இதை நம்பிய வெள்ளையம்மாள், ஆசை ஆசையாக வீட்டை விட்டு சென்றார். பின்னர் முத்து, வெள்ளையம்மாளை துடையூரில் உள்ள காவிரி ஆற்றங்கரை ஓரத்திற்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெள்ளையம்மாளை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த வெள்ளையம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோதிடர் கைது

பின்னர் அங்கு குழிதோண்டி வெள்ளையம்மாள் உடலை புதைத்துவிட்டு, திருச்செங்கோட்டிற்கு முத்து வந்துள்ளார். இதனிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற மகள் திரும்பி வராததால் கந்தசாமி அதிர்ச்சியடைந்தார். அவர் அக்கம்பக்கத்தில் தேடியும் வெள்ளையம்மாள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் கந்தசாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் முத்து, வெள்ளையம்மாளை கொலை செய்து விட்டதாக கூறி திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேலிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் வெள்ளையம்மாள் மாயமான வழக்கை, கொலை வழக்காக மாற்றி முத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நேற்று முத்துவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார், துடையூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் வெள்ளையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்