ராமநாதபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலையில் மேலும் 3 பேர் கைது

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக மேலும் 3 பேர் ராமநாதபுரம் அருகே கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-01-22 23:00 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு மைதானத்தின் அருகே சிலர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசாரை பார்த்தவுடன் 4 பேர் தப்பியோட முயன்றனர். அதில் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் கீழக்கரை பகுதியை சேர்ந்த புறா கனி என்கிற பிச்சை கனி(வயது 55), கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனியை சேர்ந்த மணிகண்டன் என்ற முகமது அலி (28) மற்றும் விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் மணல்மேடு பகுதியை சேர்ந்த முகமது அமீர்(31) என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய மற்றொரு நபர் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை ஷேக் தாவூது எனவும், இவர் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்து இருப்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது

மேலும் களியக்காவிளையில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய அப்துல் சமீம் என்பவருக்கு பண பரிமாற்றம் செய்வதற்கு உதவிய கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது ரிபாஸ் என்பவரோடு இவர்கள் 4 பேரும் சேர்ந்து கூட்டாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தற்போது முகமது ரிபாஸ் சிறையில் இருக்கும் நிலையில் இவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலமாக இளைஞர்களை மூளை சலவை செய்து தவறான பாதைக்கு திருப்பியதாகவும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துக்களை பரப்பியதாகவும் போலீசார் பரபரப்பு தகவலை தெரிவித்தனர்.

இதுதொடர்பான வாட்ஸ்-அப் ஆடியோ மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இந்த விவகாரம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஷேக் தாவூதை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்