தஞ்சையில் 880 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

தஞ்சையில் 880 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதாக நகராட்சி முன்னாள் கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-13 23:22 GMT
தஞ்சாவூர்,

பொதுவினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேஷன் கடைகள் மூலம் 35 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1½ கிலோ சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் சில இடங்களில் அரிசியை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யாமல் கடத்தி சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதேபோல் தஞ்சையை அடுத்த அம்மன்பேட்டை ரேஷன் கடையில் இருந்து அரிசியை ஊழியர்களே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக தஞ்சை குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் ரேஷன் கடையை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

3 பேர் கைது

அப்போது ரேஷன் கடையில் இருந்து சரக்கு ஆட்டோவில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு பள்ளியக்கிரகாரத்தில் உள்ள மாவு மில்லுக்கு கொண்டு செல்லப்படுவதை அறிந்த இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் கோகுல் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் சரக்கு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசி, மாவு மில்லுக்கு கொண்டு செல்லப்பட்டதும், இந்த அரிசியை மாவாக அரைத்து விற்பனை செய்வதற்காக கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் கடை விற்பனையாளர் சங்கர்(வயது51), சரக்கு ஆட்டோ டிரைவர் பாபு(42), தஞ்சை பள்ளியக்கிரகார மாவு மில் உரிமையாளரும் நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான அசோக்குமார்(58) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும், 880 கிலோ அரிசி அடங்கிய 18 மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நகராட்சி முன்னாள் கவுன்சிலரான அசோக்குமார், தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்