கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது

கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதையொட்டி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-06-15 20:30 GMT
அழகியமண்டபம்,

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மாவட்ட வழங்கல் அதிகாரியின் அறிவுரைப்படி வருவாய்த்துறை பறக்கும் படை தனி தாசில்தார் பாபு ரமேஷ் தலைமையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தனி வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஜ்குமார் ஆகியோர் நாகர்கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது பார்வதிபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த வாகனம் தார்பாயால் மூடப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அது நிற்காமல் சென்றது. உடனே அதிகாரிகள் 5 கி.மீ. தூரம் துரத்தி சென்று தோட்டியோடு அருகில் அந்த வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓட முயன்றார் உடனே அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பெயர் சஜூ (வயது 39), களியக்காவிளையை சேர்ந்தவர் என்றும், அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து 2 டன் ரேஷன் அரிசியும், வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவை தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சஜூவை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சஜூ ஏற்கனவே ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது. 

மேலும் செய்திகள்