திருமங்கலம் அருகே காரில் 650 மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் சிக்கினர்

திருமங்கலம் அருகே காரில் கடத்தப்பட்ட 650 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-12 05:24 GMT
திருமங்கலம்,

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து மதுரையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கூடக்கோவில் கிராமத்தில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தி செல்வதாக திருமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் திருமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று மேல உப்பிலிகுண்டு விலக்கு அருகே சென்று கொண்டு இருந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரின் உள்ளே சாக்குப்பை, அட்டை பெட்டிகள், சீட்டின் அடிப்பகுதியில் மது பாட்டில்களை மறைத்து கடத்திச் சென்றது தெரிய வந்தது.

விசாரணையில் காரில் இருந்த மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (42), பாலமுருகன் (45), பெரியார் நிலையத்தை சேர்ந்த ஜோதிமணி (31), சிந்தாமணியைச் சேர்ந்த பாண்டி (38) ஆகிய 4 பேரும் மேல அனுப்பானடிக்கு மது பாட்டில்களை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதைடுத்து கார் மற்றும் 650 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்