அரகண்டநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

அரகண்டநல்லூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது.

Update: 2020-07-17 05:16 GMT
திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஆலம்பாடி கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுத்த உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பிரபாகரன், கலையரசன் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். சோதனையில் அந்த வேனில் 810 கிலோ எடையுள்ள மொத்தம் 30 ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் சடையன்ஓடை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலன் மகன் சிலம்பரசன் (வயது 35), அண்ணாமலை மகன் முனியப்பன் (32), அசோகன் மகன் பார்த்தசாரதி (19), வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் அஜீத் (19) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிநாராயணனிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்