கோபியில் உர விற்பனையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை ரூ.4 கோடி- ஆவணங்கள் பறிமுதல்

கோபியில் உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் நடத்திய திடீர் சோதனையில் ரூ.4 கோடி மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-02 00:53 GMT
கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி ஸ்ரீ நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் வீட்டின் அருகில் உள்ள ஈரோடு- சத்தி ரோட்டில் மொத்த உர விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த உர விற்பனை நிலையத்தில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உரங்கள் வாங்கி செல்வார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு மற்றும் கோவையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் கார்களில் கோபி ஸ்ரீநகர் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் உள்ளூர் போலீசார் உதவியுடன் சோமசுந்தரத்தின் வீட்டுக் குள் நுழைந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் வீட்டின் அருகில் இருந்த உர விற்பனை நிலைய குடோன் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

ரூ.4 கோடி பறிமுதல்

அப்போது வீடு, உர விற்பனை நிலைய குடோன் மற்றும் அலுவலகத்துக்குள் வெளி ஆட்கள் யாரையும் விடவில்லை. இதேபோல் வீட்டுக்குள் இருந்து யாரையும் வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இந்த சோதனை நேற்று அதிகாலை 4.30 மணி வரை நடைபெற்றது. சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 கோடி மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது. உடனே சோமசுந்தரம் தரப்பினர் வருமான வரித்துறையினரிடம், ‘உறவினர்கள் 12 பேருக்கு சொந்தமான இடம் விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை தாங்கள் வைத்திருந்ததாகவும், அந்த பணம் அவரவர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியது,’ எனவும் கூறியதாக தெரிகிறது. அதற்கு வருமான வரித்துறையினர், ‘உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லலாம்,’ என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்