விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; பயணி கைது
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி கைது செய்யப்பட்டார்;
பெங்களூரு:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் ராஜஸ்தானை சேர்ந்த நந்தகிஷோர் பட்டி (வயது 28) என்ற பயணி பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்த போது விமான பணிப்பெண் ஒருவருக்கு, நந்தகிஷோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பணிப்பெண் தனது சக பணிப்பெண்களிடம் தெரிவித்தார். அவர்கள் நந்தகிஷோரை எச்சரித்தனர்.
இதனால் விமான பணிப்பெண்ணிடம், நந்தகிஷோர் மன்னிப்பு கேட்டு உள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த விமான பணிப்பெண்ணிடம், நந்தகிஷோர் டீ கேட்டு உள்ளார். டீ கொண்டு வந்த பணிப்பெண்ணுக்கு மீண்டும் நந்தகிஷோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதன்பின்னர் விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் சம்பவம் குறித்து விமான பணிப்பெண் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகிஷோரை கைது செய்தனர்.