தி.மு.க. பிரமுகர் துண்டு, துண்டாக வெட்டி கொலை: கூவத்தில் வீசப்பட்ட தலையை மீனவர்கள் வலை மூலம் தேட நடவடிக்கை

சென்னையில் தி.மு.க. பிரமுகர் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூவத்தில் வீசப்பட்ட தலையை மீனவர்களின் வலை மூலம் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-;

Update:2022-05-18 11:35 IST
சென்னை,  

சென்னையில் கல்லூரி மாணவர்கள் ஒரே நாளில் 3 மோதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் மாணவர்கள் மீதுதான் தவறு உள்ளது. அதுதொடர்பாக 10 மாணவர்கள் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது முறையாக மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் மாணவர்கள் இதுபோன்ற தவறுகள் செய்யாமல் இருக்க பள்ளி-கல்லூரிகள் தொடங்கும்போதே ஒரு வார காலத்திற்கு இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசார வகுப்புகள் எடுப்பதற்கு பள்ளி கல்வித்துறையும், உயர் கல்வித்துறையும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

சென்னையில் தி.மு.க. பிரமுகர் துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூவத்தில் வீசப்பட்ட தலையை, மீனவர்கள் வலை மூலம் தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துண்டு, துண்டாக வெட்டப்பட்ட 6 உடல்பாகங்களில் இருந்து ரத்தம், திசுக்கள் மற்றும் எலும்பு மஜ்ஜை பகுதிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலமும் கொலை செய்யப்பட்டவர் அடையாளம் காணப்படும்.

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கொள்ளை அடித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது. அது தவிர கண்காணிப்பு கேமரா காட்சிகள் போன்ற விஞ்ஞான பூர்வமான தடயங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களை வரவேற்று விசாரித்து, புகார் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வரவேற்பு போலீசார் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்