பொய்களால் நிரம்பியது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி விளாசல்
பொய்களால் நிரம்பியது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.;
பசிகாட்,
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை, டெல்லியில் உள்ள அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் நேற்றுமுன்தினம் வெளியிட்டனர்.
இதில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போடப்படும், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்பவை உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.
மோடி விமர்சனம்
இந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி, அருணாசல பிரதேச மாநிலம், பசிகாட் நகரில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-
இந்த நாடாளுமன்ற தேர்தல், நம்பிக்கை மற்றும் ஊழல், தீர்மானம் மற்றும் சதி ஆகியவற்றுக்கு இடையேயான தேர்வை கொண்டுள்ளது.
அவர்களைப் போல (காங்கிரசாரைப்போல) அவர்களது தேர்தல் அறிக்கையும் ஊழலாலும், பொய்களாலும் நிரம்பி உள்ளது. அது போலித்தனமான ஒரு ஆவணம்; அது தேர்தல் அறிக்கை அல்ல.
‘தவறான வாக்குறுதி தராது, பா.ஜனதா’
காங்கிரஸ் கட்சி போன்று பாரதீய ஜனதா கட்சி ஒரு போதும் தவறான வாக்குறுதிகளைத் தராது. நாட்டில் உள்ள சுமார் 6 கோடி பெண்களுக்கு வாக்குறுதிப்படி இலவச சமையல் கியாஸ் இணைப்பு தரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் கழிவறை கட்டித்தரப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ சிகிச்சை பெற முடியும்.
அர்ப்பணிப்பு உணர்வு
நான் பிரதமரான பின்னர் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூற மாட்டேன். ஆனால், நாட்டை எதிர்கொள்ளும் எந்த ஒரு சவாலையும் எதிர்த்து நிற்கக்கூடிய மனிதன் நான் என்பதை சொல்ல முடியும். எல்லாப்பணிகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் திட்டமிட்டு நிறைவேற்றுகிறவன் என சொல்ல முடியும்.
ஓட்டுகளின் பெயரால் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை முட்டாள்கள் ஆக்குகிறது. ஆனால் பாரதீய ஜனதா கட்சி எப்போதும் விவசாயிகளுடன் இருக்கிறது.
அன்பும், பாசமும்...
விவசாயிகளை ஏமாற்றும் பாவத்தை நாங்கள் ஒருபோதும் செய்தது இல்லை. அவர்கள் விதைப்பதில் இருந்து சந்தைக்கு உற்பத்தி பொருட்களை கொண்டு செல்வது வரையிலான வழிமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு 30 முறைக்கு மேல் நான் வந்திருக்கிறேன். ஏனென்றால் இந்த மக்கள் மீது நான் அத்தனை அன்பும், பாசமும் வைத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.