சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக தற்போது தீபக் மிஸ்ரா பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவி காலம் அடுத்த மாதம்(அக்டோபர்) 2–ந்தேதியுடன் நிறைவடைகிறது.

Update: 2018-09-04 23:15 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டுக்கு இதனால் புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படவேண்டும்.

தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, தனக்கு அடுத்து தலைமை நீதிபதியாக வரக்கூடிய மூத்த நீதிபதி குறித்து முறைப்படி பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கவேண்டும் என்பது மரபு வழியாக உள்ளது.

அதன்படி தீபக் மிஸ்ரா, அடுத்த தலைமை நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ரஞ்சன் கோகாயை நியமிக்க பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை சட்ட அமைச்சகத்துக்கு நேற்று அனுப்பினார். இக்கடிதத்தை அந்த அமைச்சகம் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லும். பிரதமர், இது தொடர்பாக தனது கருத்தை ஜனாதிபதிக்கு தெரிவிப்பார். இதன்பின்னர், சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் பற்றிய அறிவிப்பை ஜனாதிபதி வெளியிடுவார்.

தீபக் மிஸ்ராவின் பதவி காலம் அக்டோபர் 2–ந்தேதியுடன் நிறைவு பெறுவதால் ரஞ்சன் கோகாய் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக அடுத்த மாதம்(அக்டோபர்) 3–ந்தேதி பதவி ஏற்பார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்