தேசிய செய்திகள்
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கண்களை தோண்டியெடுத்த 14 வயது சிறுவன்

9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கண்களை தோண்டியெடுத்த 14 வயது சிறுவன் மற்றும் மாற்றாந்தாய் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஸ்ரீநகர் 

ஜம்மு காஷ்மீரில் 9 வயது சிறுமியை 14 வயது சிறுவன் நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் உரி பகுதியை சேர்ந்த  9 வயது சிறுமியை கடந்த 23 தேதியில் இருந்து காணவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் உடல்  அழுகிய நிலையில் காட்டுப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். அவரது கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு உள்ளது.
 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பாரமுல்லா மாவட்டம் உரியை சேர்ந்த நபர் ஒருவருக்கு 2 மனைவிகள் இருக்கின்றனர். அந்த நபர் தனது முதல் மனைவியை விட 2-வது மனைவியுடனும் அவரது 9 வயது மகளுடனும் பாசமாக இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த முதல் மனைவி, 2வது தாரத்தின் மகளை நாசம் செய்யும்படி தனது 14 வயது மகனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த 14 வயது சிறுவன், தனது தங்கை முறையான அந்த 9 வயது சிறுமியை நண்பர்களோடு சேர்ந்து கடத்தினான். பின் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அத்தோடு நிறுத்தாமல் சிறுமியின் தலையை கோடாரியால் வெட்டி உள்ளான்.  கூர்மையான ஆயுதங்களால் சிறுமியின் கண்களை தோண்டி எடுத்தும், ஆசிட் ஊற்றி சிறுமியின் உடலை சிதைத்துள்ளான். பின் சிறுமியின் உடலை அருகிலிருக்கும் புதருக்குள் மறைத்துள்ளனர்.
 
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இந்த கொடூர செயலை செய்த 14-வயது சிறுவன், அவனது தாய், மற்றும் நண்பர்களை கைது செய்துள்ளனர்.

அந்த கயவர்களை விசாரணை என்ற பெயரில் ஜாலியாக உட்கார வைப்பதை விட உடனடியாக அவர்களுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும் என அந்த சிறுமியின் தாய் கதறி அழுத படியே கூறியுள்ளார்.