தேசிய செய்திகள்
பேஸ்புக்கில் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’ எனப்படும் முகநூலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகிறார்கள்.  இந்தநிலையில்,  அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு தொடர்பான புகாரை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர உள்ளது. 

அந்த வகையில் அரசியல் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள், ஆபாசம், பயங்கரவாதம், குற்றம் தொடர்பாக கருத்துக்கள் உள்ளிட்ட வீடியோக்களை கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக 20 ஆயிரம் பேரை விரைவில் பணி அமர்த்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில் தமிழ், கன்னடம், ஒரியா, மராத்தி உள்ளிட்ட மொழிகள் பேசும் இளைஞர்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை  பெற்றுள்ள ஐதராபாத்தில் உள்ள ஜென்பேக்ட் கருத்துகள் மேலாண்மை சேவை என்ற நிறுவனம் நேர்முகத்தேர்வை நடத்துவதாக தெரிவித்துள்ளது.