அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்தது; 3 பேர் பலி

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாயினர்.

Update: 2018-09-05 18:07 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலம் வழியாக பிரம்மபுத்ரா நதி ஓடுகிறது. அந்த நதியில், தலைநகர் கவுகாத்தியில் இருந்து வடக்கு கவுகாத்தி நோக்கி ஒரு நாட்டு எந்திர படகு புறப்பட்டது. அதில், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 40 பேர் பயணம் செய்தனர். இதில் சட்டத்திற்கு புறம்பான வகையில் 18 இருசக்கர வாகனங்களும் ஏற்றப்பட்டன.

அளவுக்கு அதிகமான சுமையுடன் சென்ற படகு, நடுவழியில் என்ஜின் கோளாறு காரணமாக நின்று விட்டது. அதன்பிறகு நீரோட்டம் வேகமாக இருந்ததால், படகு தள்ளப்பட்டு ஒரு குடிநீர் திட்ட இரும்புத்தூண் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். சுமார் 12 பேர் நீந்தியும், காப்பாற்றப்பட்டும் உயிர் பிழைத்தனர். மற்றவர்களை காணாததால், அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்–மந்திரி சர்வானந்தா சோனோவால், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவத்தினால் நதியில் படகு போக்குவரத்து தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்