சட்டசபை கலைப்பு பற்றி முடிவு செய்ய தெலுங்கானா மந்திரி சபை இன்று மீண்டும் கூடுகிறது

2014–ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு அங்கு நாடாளுமன்ற மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

Update: 2018-09-05 22:30 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைக் கைப்பற்ற அதன் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்–மந்திரி ஆனார். தெலுங்கானா சட்டசபையின் ஆயுள் காலம் முடிவதற்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது.

எனினும், சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் சந்திரசேகர ராவ் அறிவித்தார். அன்று தனது மந்திரி சபையை கூட்டியும் அவர் விவாதித்தார். சட்டசபை தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதற்கு வசதியாக பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளையும் அண்மைக்காலமாக அவருடைய அரசு வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் தெலுங்கானா மந்திரிசபை மீண்டும் இன்று (வியாழக்கிழமை) கூடுகிறது. கடந்த 5 நாட்களில் மந்திரி சபை கூடுவது 2–வது முறையாகும். இக்கூட்டத்தில் சட்டசபையை கலைப்பது பற்றிய முடிவு எடுக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் விரைவில் நடைபெற இருக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களுடன் தெலுங்கானாவிலும் தேர்தல் நடைபெறும்.

மேலும் செய்திகள்