முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் கேரளாவின் கோரிக்கை நிராகரிப்பு

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக துணைக்குழு முடிவு செய்ய உத்தரவிட்டது.

Update: 2018-09-07 00:00 GMT

புதுடெல்லி,

கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணத கனமழையால் அந்த மாநிலமே வெள்ளக்காடாக மாறியது. இதற்கிடையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், அதில் இருந்து உபரி நீரை தமிழக அரசு திறந்துவிட்டது.

கேரளாவின் வெள்ள சேதத்துக்கு இதுவும் ஒரு காரணம் என கேரள அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, முல்லைப் பெரியாறு அணையின் உச்ச நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக்கோரி, ஜாய் ரசூல் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் தேக்கம் மற்றும் திறப்பை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய நீர் ஆணைய தலைவரின் தலைமையில் மேற்பார்வை குழுவும், மத்திய தலைமை பொறியாளர் தலைமையில் மேலாண்மை குழுவும் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 24–ந் தேதி இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை வருகிற 31–ந் தேதி வரை 139.99 அடியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 6–ந் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி நேற்று இந்த வழக்கு அதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை துவங்கியதும் மனுதாரர் ஜாய் ரசூல் தரப்பில் ஆஜரான வக்கீல் மனோஜ் வி.ஜார்ஜ் ‘‘முல்லைப்பெரியாறு அணையை வெளிநாட்டு பொறியாளர்கள் அடங்கிய ஆய்வு குழுவை வைத்து ஆய்வு செய்ய வேண்டும்’’ என வாதாடினார்.

தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, வக்கீல் ஜி.உமாபதி ஆகியோர் தங்கள் வாதத்தில் ‘‘முல்லைப்பெரியாறு அணை 152 அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு பலமாக உள்ளது. அணையின் பலம் குறித்து வல்லுனர் குழு ஆய்வறிக்கையும் அளித்துள்ளது. எனவே அணையை ஆய்வு செய்ய வெளிநாட்டு சிறப்பு வல்லுனர் குழுவை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையது அல்ல’’ என தெரிவித்தனர்.

இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் கேரளாவின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் நீர் மட்டத்தை குறைப்பது குறித்து அணை பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘அணையில் நீரின் மட்டத்தை உயர்த்துவது, குறைப்பது ஆகியவை தொடர்பாக கருத்து கூற நாங்கள் நிபுணர்கள் அல்ல. கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை கணக்கில் கொண்டு, பாதுகாப்பு துணைக்குழுவின் ஆலோசனையின் படி ஆகஸ்டு 31–ந் தேதி வரை 139.9 அடியாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நீரின் மட்டத்தை உயர்த்துவது, குறைப்பது தொடர்பாக முடிவெடுக்க நிபுணர்கள் அடங்கிய அணை பாதுகாப்பு துணைக்குழு உள்ளது. அந்த குழு பார்த்துக்கொள்ளும்’’ என கூறினர்.

மேலும் வழக்கின் மீதான விசாரணையை 8 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்