தேசிய செய்திகள்
குழந்தை கடத்தல் நபர் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் மீது சரமாரி தாக்குதல்

குழந்தை கடத்தல் நபர் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது.
பெங்களூரு,

குழந்தை கடத்தல் கும்பல் என்ற வதந்தியால் சமீப காலமாக கும்பலாக இணைந்து அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வதந்திகளால், அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் நிலையிலும், அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கி விடுகின்றன. 

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள வொயிட்பீல்டு அருகே, மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடமாடினார். இதைக்கவனித்த உள்ளூர்வாசிகள், அவரைப்பற்றி எந்த தகவலும் அறியாமல், குழந்தை கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர் எனக்கருதி மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கத்துவங்கினர். தாக்கப்பட்ட காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டும் உள்ளது. 

அந்த வீடியோவில், மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம், இந்தியில் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோருகிறார், இதற்கு, எந்த சலனமும் காட்டாததால், ஆத்திரம் அடைந்த உள்ளூர்வாசிகள், நாடகமாடுவதாக கூறி மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில், கொடூரத்தின் உச்சம் என்னவெனில், உள்ளூர்வாசி ஒருவர் சிரித்துக்கொண்டே மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அடித்ததுதான். 

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார், விரைந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.