தேசிய செய்திகள்
ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையே பா.ஜனதா அரசை வீழ்த்துவதற்கு போதுமானவை -காங்கிரஸ்

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையே பா.ஜனதா அரசை வீழ்த்துவதற்கு போதுமானவை என காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக வரும் நான்கு மாநிலத் தேர்தல்கள் இதற்கான அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதே வரிசையில் தெலுங்கானாவும் இணையும் என பார்க்கப்படுகிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற பெரும் பங்கு காங்கிரசுக்கு உள்ளது, மற்றொரு புறம் மம்தாவும் இம்முயற்சியை மேற்கொள்கிறார்.

இதற்கிடையே மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்து பேசியுள்ள முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசை வீழ்த்துவதற்கு ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகிய இரண்டு காரணிகளே போதுமானது என கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் பிராந்தியம் வாரியாக காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகரிக்கும், காங்கிரஸ் 150- தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும். வேட்பாளர்கள் தேர்வு மற்றும் நேர்த்தியான கூட்டணியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 200 தொகுதிகளை எட்டவும் வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

ஸ்திரமான கூட்டணியின் மூலம் இறுதியில் எதிர்க்கட்சிகள் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வெற்றி பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் மட்டுமே முக்கியமாக வலியுறுத்துகிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முக்கியமானதாக எடுத்துக்கொள்ளவில்லை என தெரிகிறது, இதனை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்து பேசியுள்ள வீரப்ப மொய்லி, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பதற்கு எதிரான காரணியாக இதனை கருதவில்லை. இவ்விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம், மற்ற கட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின. ஆனால் தொடரவில்லை. ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல் என கூறியுள்ளார்.