தேசிய செய்திகள்
பசு பாதுகாப்பு, கும்பல் தாக்குதல் உத்தரவிற்கு இணங்க வேண்டும் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பசு பாதுகாப்பு, கும்பல் தாக்குதல் விவகாரத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு இணங்கவேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
 
கும்பல் தாக்குதல் மற்றும் பசு பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டு இருந்தது. 29 மாநிலங்களில் 11 மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது சுப்ரீம் கோர்ட்டு, அறிக்கையை தாக்கல் செய்யாத அரசுக்களை கடிந்துக்கொண்டது. அறிக்கையை தாக்கல் செய்யாத மாநிலங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

 “அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்றால் மாநில உள்துறை செயலாளர்கள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட வேண்டியிருக்கும்,” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு பதிலளிக்கையில் பசு பாதுகாப்பு தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் கும்பல் தாக்குதல் விவகாரத்தில் சட்டம் கொண்டுவர பரிந்துரைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஜூலை 20-ம் தேதி பசுமாடு வாங்கி சென்றவர் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார், இவ்விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு சென்றுள்ள காங்கிரஸ், ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.