தேசிய செய்திகள்
பிஎன்பி மோசடி மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ்கூட உதவாது அதிகாரிகள் அச்சம்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ்கூட உதவாது என அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவருடைய நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது. இருவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.

 வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் விசாரணையை மேற்கொண்டது. மோசடி தொடர்பான விசாரணை தொடங்கியதுமே விசாரணைக்கு ஆஜராக சம்மன் விடுக்கப்பட்டது. ஆனால் இருவர் தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் விடுக்க அமலாக்கப்பிரிவு சர்வதேச போலீசான இன்டர்போலை நாடியது. இதனையடுத்து நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. 

இதேபோன்று மெகுல் சோக்‌ஷிக்கு எதிராகவும் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பதற்கான பணியை இந்தியா முடித்துவிட்டது. இதற்கிடையே ஆன்டிகுவா குரியுரிமையுடன் மெகுல் சோக்‌ஷி அங்கிருப்பதாக தகவல் வெளியாகியது. அந்நாட்டிடம் இந்தியா உதவியை கோரியதாக தகவல் வெளியாகியது. மெகுல் சோக்‌ஷியை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் சிபிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே மெகுல் சோக்‌ஷியை இந்தியா கொண்டுவர இன்டர்போல் நோட்டீஸ் ஒருவேளை உதவாது என அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. நிரவ் மோடி போன்றில்லாது மெகுல் சோக்‌ஷி தப்பிப்பதற்கு தேவையான நகர்வை முன்னெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வழக்கை தீவிரமாக தொடரும் சிபிஐ சமீபத்தில் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுக்க கோரிக்கை முன்வைத்தது. 

அரசியல் லாபத்திற்கான நகர்வு என்ற மெகுல் சோக்‌ஷியின் குற்றச்சாட்டை சிபிஐ நிராகரித்தது. இருப்பினும் மெகுல் சோக்‌ஷியின் குற்றச்சாட்டை அடுத்து இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பது தொடர்பான கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளது. மெகுல் சோக்‌ஷி இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் தொடர்பான கோரிக்கை மற்றும் சிறைகளின் நிலையை முன்வைத்துள்ளார். இவ்விவகாரம் இன்டர்போலின் 5 நபர்கள் கமிட்டிக்கு சென்றுள்ளது, அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் போது இருதரப்பு விளக்கத்தையும் கேட்டு, ரெட்கார்னர் நோட்டீஸ் விடுப்பது தொடர்பான முடிவை அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.