தேசிய செய்திகள்
இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வழக்குப்பதிவு

இளைஞர்களுக்காக பெண்களை கடத்துவதாக கூறிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை,


 மும்பை காட்கோபரில் நடந்த உறியடி நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், உங்கள் காதலை ஏற்க மறுக்கும் பெண்களை உங்களுக்காக கடத்தி வருவேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இதற்காக தனது செல்போன் நம்பரை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று கூறி நம்பரையும் கொடுத்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, ராம்கதம் எம்.எல்.ஏ. தனது கருத்துக்காக வருத்தம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன. இந்தநிலையில், ராம் கதமின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு 8 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மாநில மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதேபோல சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து விளக்கம் அளிக்குமாறு ராம் கதம் எம்.எல்.ஏ.வுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.
 
இந்நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சோலாபூர் மாவட்டம் பர்ஷாய் காவல் நிலையத்தில் பெண்கள் ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின்படி இந்திய தண்டனை சட்டம் பிரிவு 504 மற்றும் 505-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நீதிமன்றம் அனுமதியின்றி, போலீஸ் விசாரணையை தொடங்கலாம்.