ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியா? பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்

ராகுல் காந்தியின் மானசரோவர் யாத்திரை புகைப்படங்கள் போலியானவை என்ற பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

Update: 2018-09-07 17:16 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார். அங்கு சக பயணிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

அவை போலியானவை என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார். யாத்ரீகர் ஒருவருடன் ராகுல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில், அவர் கையில் வைத்திருக்கும் ஊன்றுகோலின் நிழல் இல்லை எனக்கூறிய அவர், இது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதைப்போல பா.ஜனதா மகளிரணியின் சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, டெல்லி எம்.எல்.ஏ. மஞ்சிந்தர் சிங் ஆகியோரும் ராகுல் காந்தியின் மானசரோவர் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர்.

பா.ஜனதாவினரின் இந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ள காங்கிரஸ் கட்சி, கைலாஷ் மலைக்கு முன்னே ராகுல் காந்தி நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் நேற்று வெளியிட்டது. அதனுடன் அவரது மலையேற்ற விவரங்களையும் குறிப்பிட்டு இருந்தது.

அதில் 46,333 படிக்கட்டுகள், 203 தளங்கள் அடங்கிய 34.31 கி.மீ. தூரத்தை 463 நிமிடங்களில் கடந்த ராகுல் காந்தி, இதன் மூலம் 4,466 கலோரி கொழுப்பை எரித்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அத்துடன், ‘கைலாஷ் யாத்திரையின்போது அனைத்து வெறுப்பாளர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேகமாக முன்னேறி சென்றார். உங்களால் முடியுமா?’ என சவாலும் விட்டுள்ளது.

மேலும் செய்திகள்