நெரிசல் இல்லாத போக்குவரத்தே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் : பிரதமர் பேச்சு

நெரிசல் இல்லாத போக்குவரத்தே பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என பிரதமர் மோடி கூறினார்.

Update: 2018-09-08 00:00 GMT

புதுடெல்லி,

நிதி ஆயோக் சார்பில் ‘சர்வதேச நகர்வு மாநாடு’ (மூவ்) டெல்லியில் நடந்தது. மின்சாரத்தில் இயங்கும் வாகன தயாரிப்புக்கான முதலீடுகளை உருவாக்குவதற்கான இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது. உலகின் மிகப்பெரிய வளரும் பொருளாதாரத்தை நாங்கள் கொண்டிருக்கிறோம். எங்கள் நகரங்கள் அனைத்தும் வளர்கின்றன. நாங்கள் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். எங்கள் உள்கட்டமைப்புகள் வளர்ச்சியடைகின்றன. சாலைகள், விமான நிலையங்கள், ரெயில் பாதைகள் மற்றும் துறைமுகங்களை வேகமாக கட்டி வருகிறோம்.

பொருளாதார வளர்ச்சியில் நகர்தல் (போக்குவரத்து) மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. சிறந்த நகர்தலானது, பயணம் மற்றும் போக்குவரத்து சுமையை குறைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. ஏற்கனவே மிகப்பெரிய வேலைவாய்ப்பு துறையாக விளங்கும் இந்த துறை, எதிர்கால வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

தூய்மையான எரிசக்தியில் இயங்கும் தூய்மையான போக்குவரத்தே, பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகும். மாசு இல்லாத தூய போக்குவரத்து மூலம் சுத்தமான காற்று மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை மக்களுக்கு வழங்க முடியும். இதற்காக மின்சாரத்தில் இயங்கும் வாகன தயாரிப்பில் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவில் எதிர்கால போக்குவரத்து, பொது, இணைப்பு, வசதி, நெரிசல் இல்லாமை, தூய்மை, துல்லியமானவை உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதில் கார், ஸ்கூட்டர், ஆட்டோ போன்ற வாகனங்களையும் தாண்டி கவனம் செலுத்த வேண்டும்.

நமது போக்குவரத்து திட்டங்களின் மூலைக்கல்லாக, பொது போக்குவரத்து இருக்க வேண்டும். தனியார் துறையில் இருப்பது போன்ற வசதிகளை பொது போக்குவரத்திலும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

வாகன நெரிசலை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை நாம் உருவாக்க வேண்டும். ஏனெனில் நெரிசல் இல்லாத போக்குவரத்துதான், நெரிசல் இல்லாத பொருளாதார, சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். போக்குவரத்து என்பது அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு, வசதி மற்றும் எளிதில் அணுக முடிவதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்