பணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம்: பிரதமர் மோடி மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தாக்கு

பணமதிப்பிழப்பு, கருப்பு பண விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அரசு மீது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு வைத்து உள்ளார். #ManmohanSingh #PMModi

Update: 2018-09-08 07:07 GMT
புதுடெல்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் எழுதியுள்ள ஷேர்ஸ்  ஆஃப் ட்ரூத் - ஜர்னி டிரைல்டுஸ் (Shades of Truth - A Journey Derailed") என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில்  கலந்து கொண்டு மன்மோகன் சிங் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த நாடு சந்திக்கும் பிரச்சினைகளை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. விவசாயிகளுக்கு  உரிய உற்பத்தி விலையை பெற்றுத் தருவதில் அரசு தோல்வி அடைந்துள்ளது. கடந்த நான்கு வருடங்களில் மோடி அரசு செயல்பட்ட விதம் குறித்து கபில் சிபலின் புத்தகம் முழு விளக்கங்களை கொண்டுள்ளது.

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை இந்தப் புத்தகம் வெளிக்காட்டுகிறது. பிரதமர் மோடி 2014-ஆம் ஆண்டு அளித்த வாக்குறுதியில், ஒரு வருடத்திற்குள் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்றார். ஆனால் கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பு என்பது குறைந்துள்ளது.

அரசு வைத்துள்ள வேலைவாய்ப்பு சார்ந்த புள்ளிவிவரங்களிலும் தவறுகள் உள்ளன. மோடி அரசு வெளியிடும் இந்த புள்ளி விவரங்களை பார்த்து மக்கள் மயங்கவில்லை. கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர இந்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு என்பது மிக மோசமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா திட்டங்கள், அதன் பலனை இன்னும் கொடுக்கவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை, நாட்டின் மாற்றத்திற்கு பயன்படுத்துவதில் மோடி அரசு தோல்வி கண்டுள்ளது. கல்வியாளர்களின் சுதந்திரம் கூட நசுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களில் சூழ்நிலை பதட்டமாக உள்ளன. இதெல்லாம் மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்று. இவை குறித்து ஆக்கபூர்வமாக, நாடு தழுவிய அளவில் விவாதம் நடக்க வேண்டியது அவசியம். பெண்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் அதிக அள்வில்  பாதுகாப்பின் சூழலில் வாழ்கின்றனர். இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்