தேசிய செய்திகள்
கல்வீசி தாக்குதல் நடத்துபவர்களை கைது செய்ய புதிய யுக்தியை கையாண்ட ஜம்மு போலீசார்

கல்வீசி தாக்குதல் நடத்துபவர்களை கைது செய்ய ஜம்மு போலீசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர். #JammuPolice
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தும் அதிகரித்து வருகிறது. இவர்களை ஒடுக்குவது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. இதனிடையே கல்வீசி தாக்குதல் நடத்துபவர்களை கைது செய்ய போலீசார் புதிய யுக்தியை கையாண்டுள்ளனர்.

நேற்று ஸ்ரீநகரிலுள்ள ஜாமா மஸ்ஜித் பள்ளி வாசலில் தொழுகை பின்னர் கல்வீச்சாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். திருப்பி தாக்குதல் நடத்தாத போலீசார் கண்ணீர் புகைக்குண்டை கல்வீச்சாளர்கள் மீது வீச, அதையும் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் திடீரென கல்வீசி தாக்குதல் நடத்தும் கும்பலில் இருந்த இருவர், போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்துபவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்ய அழைத்து சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத கும்பலில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர். கும்பலை பிடிக்க போலீசாரே மாறுவேடமிட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது பின்னர் தெரியவந்தது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு கல்வீசும் கும்பலை கைது செய்ய போலீசார் இதே யுக்தியை கையாண்டது குறிப்பிடத்தக்கது.