அமித்ஷாவின் பதவிக்காலத்தை நீட்டிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு?

அமித்ஷாவின் பதவிக்காலத்தை நீட்டிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2018-09-08 13:33 GMT
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் இரண்டு நாள் செயற்குழு கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.  பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, பா.ஜனதா ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்-மந்திரிகள், துணை முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இதில் கலந்து  கொண்டுள்ளனர்.  டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில், இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.   பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலத்தை  நீட்டிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, 2014 ஆகஸ்ட் மாதத்தில் அக்கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார்.  இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிகிறது. ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை அமித்ஷா பாஜக தலைவராக  இருப்பதற்காக, உட்கட்சி தேர்தல் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு தேசிய செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது. 

பாரதீய ஜனதா கட்சி விதிப்படி, கட்சி உறுப்பினர்கள் யார்வேண்டுமானாலும், தலைவராக முடியும். அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் என தலா இருமுறை பாரதீய ஜனதா தலைவராக நீடிக்கலாம். 

மேலும் செய்திகள்