தேசிய செய்திகள்
“இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” மோகன் பகவத் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

“இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், சிங்கத்தை நாய்கள் வேட்டையாடும்” என்ற மோகன் பகவத் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #MohanBhagwat
சிகாகோ/புதுடெல்லி,

சிகாகோவில் 1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இந்து மதம் குறித்து உரையாற்றினார். அதனுடைய 125-வது நினைவுநாளையொட்டி சிகாகோவில் 2-வது உலக இந்து மாநாடு நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். 

அப்போது மோகன் பேசுகையில், “இந்துக்கள் ஒருபோதும் ஒன்று சேரமாட்டார்கள், தனியாக ஒரு சிங்கமோ அல்லது வங்காளப் புலியோ காட்டில் நடந்து செல்லும்போது காட்டு நாய்கள் வேட்டையாடும் கதைதான் இருந்து வருகிறது” என்றார். இருவேறு சமூகங்களை குறிப்பிட்டு பேசியதாக அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், அதனுடைய கொள்கை “இந்துக்களுக்கு எதிரானது,” என விமர்சனம் செய்துள்ளது.  

தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கொள்கை இந்துக்களுக்கு எதிரானது, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ஜாதிய அடிப்படையிலான அரசியலாகும். அவர்கள் எப்போது ஜாதியின் அடிப்படையில் இந்துக்களை பிரிப்பதை தடுக்கிறார்களோ அப்போது அனைத்து இந்துக்களும், பிற மதத்தை சேர்ந்த மக்களும் புலியாவார்கள்,” என்று கூறியுள்ளார். 

காங்கிரஸ் தலைவர் சச்சின் சுவாந்த் பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையானது இந்துக்களுக்கு எதிரானது. பிற ஜாதியினருக்கு மற்றும் மதங்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்துவதில் அறியப்பட்டது. எந்தஒரு மதத்தையும் இதுபோன்று விவரிப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவருக்கு அவமானகரமானது,” என்று கூறியுள்ளார். இருப்பினும் பா.ஜனதா தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.