தேசிய செய்திகள்
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கியால் சுட்ட பா.ஜனதா நிர்வாகிகள்

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவரும், பா.ஜனதா இளைஞரணி தேசிய செயற்குழு உறுப்பினருமான ராகுல் ராஜ்புத் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
போபால்,
போபால் மாவட்ட பா.ஜனதா இளைஞரணி தலைவர் நிதின் துபே உள்பட பலர் இதில்  கலந்து கொண்டனர்.ராஜ்புத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அவரும், நிதின் துபேயும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர், இது குறித்து நேற்று பரியாகர் போலீசில் புகார் செய்தார். அந்த பா.ஜனதா இளைஞரணி நிர்வாகிகளின் துப்பாக்கிச்சூடு வீடியோவையும் அதனுடன் அவர் இணைத்து இருந்தார். இது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ராஜ்புத், ‘இந்த சம்பவத்துக்கு நான்தான் காரணம். அது உரிமம் பெற்ற எனது துப்பாக்கி அல்ல, மாறாக ஒரு சீன துப்பாக்கி. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுடுமாறு என்னையும், நிதினையும் கேட்டுக்கொண்டார். அதன்பேரிலேயே நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம்’ என்று கூறினார்.